''அமெரிக்கா மற்றும் இந்தியா தலைவர்களுக்கு இடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்'' என்று தனது அமெரிக்க பயணத்திற்கு முன்பு வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் வேண்டுகோளை ஏற்று அரசு முறைப் பயணமாக இன்று காலை பிரதமர் மோடி தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன்பு அமெரிக்காவின் பிரபலமான வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், ''முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கொடுத்திருந்த பேட்டியில், ''இந்தியா மிகவும் உயர்ந்த தனக்கென்று மதிப்புகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஆழமானது, விரிந்தது. எந்த நாட்டையும் முந்திச் செல்வது என்பது இந்தியாவின் நோக்கம் இல்லை. ஆனால், உலகில் எங்களுக்கான சரியான இடத்தை தக்க வைத்துக் கொள்வதிலும், அதற்கான முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தி வருகிறோம்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று உலக நாடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளன. முன்னேற்றத்தைக் காண பன்முகத்தன்மை இருக்க வேண்டும்.
சீனாவுடனான இயல்பான இருதரப்பு உறவுகளுக்கு, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். எனது அமெரிக்கப் பயணம் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது, சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பது மற்றும் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பது ஆகியவற்றில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: முழு விவரம்!
அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். சர்ச்சைகளை "ராஜதந்திரம் மற்றும் உரையாடல்" மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர, போரினால் அல்ல. நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதியில்தான் என்பதில் உலக நாடுகளும் முழு நம்பிக்கை கொண்டுள்ளன.
ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள தற்போதைய உறுப்பினர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் இந்தியா இதில் பங்கேற்பது குறித்து உலக நாடுகள் முடிவுகள் செய்ய வேண்டும். மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமைதியை நிலைநாட்ட தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இந்தியா முன்னெடுக்கும்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான். அதனால்தான் எனது சிந்தனை செயல்முறை, எனது நடத்தை, நான் சொல்வது மற்றும் செய்வது, எனது நாட்டின் பண்புகள் மற்றும் பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் அதிலிருந்து என் பலத்தைப் பெறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.