
கோவா முதல் அமைச்சராக மனோகர் பாரிக்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாரிக்கருடன் அமைச்சர்களாக 9 எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆட்சியமைக்க உரிமை
கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எம்.ஜி.பி., கோவா முன்னணி உள்ளிட்டவை மீதம் உள்ள 10 இடங்களை கைப்பற்றின.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை பாஜக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 22 எம்எல்ஏக்களுடன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் சந்தித்தார். பின்னர், தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை சுட்டிக்காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
15 நாட்கள் கெடு
இதற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில், நேற்று பதவியேற்பு விழா தலைநகர் பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
பதவிப் பிரமாணம்
மனோகர் பாரிக்கருக்கு கவர்னர் மிருதுளா சின்ஹா முதல் அமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், கோவா முன்னணியில் உள்ள 3 எம்எல்ஏக்கள், எம்.ஜி.பி. கட்சியில் இருந்து 2 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் என மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், இலாகாக்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மகிழ்ச்சி அளிக்கிறது’
பதவியேற்புக்கு பின்னர் மனோகர் பாரிக்கர் அளித்த பேட்டியில், சட்டப்பேரவையில் நாளை நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்போம். மத்திய அமைச்சரவையில் இருந்து மாநில அரசியலுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி அனுமதிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனையைத்தான் எங்களுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் வைத்தனர்.
அவர்களது ஆதரவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எங்களது கூட்டணி அரசுக்கு 55 சதவீத கோவா மக்களின் ஆதரவு உள்ளது என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து
காங்கிரஸ் நம்பிக்கை
மனோகர் பாரிக்கரின் பதவி ஏற்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறுகையில், ‘சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பதில் எங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் கிடையாது. போதுமான உறுப்பினர்களின் பலம் எங்களிடம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்.
2 நாட்களுக்கு மட்டும் கோவாவின் முதல் அமைச்சராக இருப்பதற்கு மனோகர் பாரிக்கர் விரும்பினால் அதனை காங்கிரசும் வரவேற்கும்’ என்றார்.