"காங்கிரஸ் தலைவராக ராகுல் வர வேண்டும்" - அமரிந்தர் சிங் வேண்டுகோள்

First Published Mar 14, 2017, 4:36 PM IST
Highlights
amarinder singh talks about rahul gandhi


காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பு ஏற்க வேண்டும் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்திப்பு

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக அமரிந்தர் சிங் நாளை பொறுப்பு இருக்க உள்ளார்.

இந்நிலையில், மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, கேப்டன்அமரிந்தர் சிங் சந்தித்து பேசினார். ஏறக்குறைய இரு தலைவர்களும் 30 நிமிடங்கள் வரை பேசினார்கள். அப்போது மாநிலத்தின் ஆட்சி அமைப்பது குறித்த இறுதியான திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்கு பின் அமரிந்தர் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மரியாதை நிமித்தம்

துணைத்தலைவர் ராகுல் காந்தி உடனான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நானும், கட்சியின் செயலாளரும் ஒன்றாக அமர்ந்து, இனி பட்டியலை தயாரிக்க இருக்கிறோம். அதன் பின் மீண்டும் வந்து ராகுலைச் சந்திப்போம். அதன்பின், அரசு அமைப்பது குறித்து கட்சித் தலைமையிடம் விவாதிப்போம்.

தலைவராக வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவாக பதவி ஏற்றால் நான் மட்டுமல்ல அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சி அடைவோம். பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க  அனைத்து தொண்டர்களுக்கும் கடுமையாக பாடுபட்டனர், வெற்றி ஒவ்வொரு தொண்டரையும் சாரும்.

நியாயமில்லாதது

கோவா, மணிப்பூரில் கட்சிகளை உடைத்து, வலுக்கட்டாயமாக ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இது நியாயமில்லாத செயல். மக்களின் தீர்ப்பை நீங்கள் மீறுகிறீர்கள். சுயேட்சைகளை ஒன்று திரட்டி நீங்கள் ஆட்சி அமைக்கலாம், ஆனால், இப்போது நீங்கள் செய்வது, சட்டவிரோதம்.

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை  உருவாக்குவோம் என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சிக்கு பஞ்சாப் வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளோம். கோவா, மணிப்பூரிலும் கூட நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

அச்சுறுத்தல் இல்லை

எங்களைப் பொருத்தவரை பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இருந்தது இல்லை. அப்படி இருந்த ஊகத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்'' எனத் தெரிவித்தார்.

ராகுல் நம்பிக்கை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், “ பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங்கை சந்தித்தேன். காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் பஞ்சாப் மாநிலம் சிறப்பான இடத்தை நோக்கி நகரும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

click me!