வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Apr 17, 2025, 02:35 PM ISTUpdated : Apr 17, 2025, 03:10 PM IST
வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுருக்கம்

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வக்ஃப் சொத்துக்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் புதிய உறுப்பினர் நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தில் தற்போதைய நிலையே தொடரும்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனமும் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

"வக்ஃப் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்வதிலும் வக்ஃப் நிலங்களைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. இவ்வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் மே 5ஆம் தேதி வரை இடைக்காலத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தச் சட்டம்:

வக்ஃப் சட்டத் திருத்தச் சட்டம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

மத்திய அரசு தரப்பில் இந்த மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க விரும்புவதாகத் தெரிவித்தது.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் இதர பதில் மனுதாரர்களின் வேண்டுகோளை ஏற்று இடைக்கால உத்தரவு பிறக்காமல், விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று மதியம் 2 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரினார். அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், அதன் பிறகு 5 நாட்களுக்குள் மனுதாரர்கள் தங்கள் மறுப்பை தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

எதிர்ப்புக் குரல்:

புதிய சட்டம் வக்ஃப் வாரியங்களின் அமைப்பை மாற்றியமைக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களையும் அதன் உறுப்பினர்களாகச் சேர்ப்பதைக் கட்டாயமாக்குகிறது. இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களின் சொத்துகளைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும்தான் வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என மத்திய அரசு வாதிடுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!