
கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
பிரதமருடன் மேடையில் சசிதரூர்:
கேரளாவின், திருவனந்தபுரத்தில் ரூ.8900 கோடி செலவில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர் சசிதரூர் ஆகியோர் மேடையில் இருப்பது குறித்து பிரதமர் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார்.
காங்கிரசில் தூக்கம் கெடும்:
பிரதமர் மோடி பேசுகையில், ''இந்த விழாவில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கலந்து கொண்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு தூக்கம் கெடும். எங்கெல்லாம் இந்த செய்தி செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று இருக்கும்'' என்றார்.
திருவனந்தபுரம் எம்பி சசிதரூர்
திருவனந்தபுரத்திலிருந்து நான்கு முறை காங்கிரஸ் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சசிதரூர் பற்றி பிரதமர் நேரடியாக குறிப்பிட்டது கேரள மக்களின் பாராட்டுக்குரிய ஒரு அரிய தருணத்தைக் குறிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள், குறிப்பாக கேரளாவில், சசிதரூர் குறித்து பல வாரங்களாக பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் இவ்வாறு பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சசிதரூரின் எக்ஸ் பதிவு
டெல்லியில் பலத்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பிரதமர் வரும்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை சசிதரூர் வரவேற்றார். பிரதமரை தரூர் வாழ்த்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. "டெல்லி விமான நிலையம் செயலிழந்து இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி எனது தொகுதிக்கு வந்தபோது அவரை வரவேற்க திருவனந்தபுரத்தில் சரியான நேரத்தில் தரையிறங்க முடிந்தது" என்று சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளா காங்கிரசில் தலைமைக்கு வெற்றிடம்: சசிதரூர்
கேரளா காங்கிரஸ் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது என்று தொடர்ந்து சசிதரூர் விமர்சித்து வந்தார். இதனால், காங்கிரஸ் கட்சி தலைமைக்கும், சசிதரூருக்கும் இடையே இடைவெளி உருவானது. கேரளாவில் ராகுல் காந்தி எம்பி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தபோதும், அந்தக் கூட்டத்தில் சசிதரூர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை சசிதரூர் சந்தித்து இருந்தார். ஆனால், அதுகுறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.
சசிதரூரை பாராட்டிய ராஜீவ் சந்திரசேகர்:
இந்த ஆண்டு மார்ச் மாதம், பாஜக கேரளா தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் தடுப்பூசி ராஜதந்திரத்தையும், ரஷ்யா-உக்ரைன் மோதலை அரசாங்கம் கையாண்ட விதத்தையும் ஒப்புக்கொண்ட சசிதரூரின் கருத்துக்களுக்காக அவரைப் பாராட்டி இருந்தார். ''அவர்கள் ஞானமடைந்துள்ளனர்," என்று ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்து இருந்தார்.