
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரசரோட்டா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 57 வயதுப் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை பின்தார்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காண்டியா கிராமத்தில் நடந்துள்ளது. சௌதாமினி மஹால (57) என்ற அந்தப் பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆற்றில் முதலை ஒன்று பெண்ணை இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் அந்தப் பெண் கரசரோட்டா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, முதலை ஒன்று அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றனர், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணி சிக்கலானதாக உள்ளது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான நபா கிஷோர் மஹால என்பவர், "முதலை அந்தப் பெண்ணை ஆற்றுக்குள் இழுத்துச் செல்வதை நாங்கள் கவனித்தோம். அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஆற்றில் குதித்தோம், ஆனால் எங்கள் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போய்விட்டன," என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மாயமான சௌதாமினி மஹாலவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களிடையே இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.