கும்பமேளாவில் பாசி மாலை விற்பனையால் பிரபலமான மோனலிசா, புகைப்படம் எடுக்க வலுக்கட்டாயமாக கூடாரத்திற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்ததால் தனது சகோதரர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தூரைச் சேர்ந்த மோனலிசா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் பிராய்கராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பாசி மாலை , ருத்ராட்ச மாலை ஆகியவற்றை விற்று வந்துள்ளார். மகா கும்பமேளா தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மோனலிசா அனைவரையும் கவர்ந்தார். நீல நிற கண்கள் கொண்ட மோனலிசாவை பார்த்து நெட்டிசன்கள் அவரின் அழகை வியந்து பாராட்டினர். மேலும் யூடியூபர் ஒருவர் மோனாலிசாவை பேட்டி எடுத்த நிலையில் அவர் படு வைரலானார்.
இந்த சூழலில் மோனலிசா ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தான் மறுத்த போதிலும் தன்னுடன் புகைப்படம் எடுக்க ஒரு குழு தனது கூடாரத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தனது சகோதரர் தலையிட்டு அவர்களின் மொபைல் போன்களில் இருந்து படங்களை நீக்கியபோது, அந்த நபர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மோனலிசா, “சில ஆண்கள் என்னை அணுகி, என் தந்தை என்னைப் புகைப்படம் எடுக்க அனுப்பியதாகச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன், என் தந்தை அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் அவரிடம் மட்டுமே செல்ல வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். நான் அவர்களுடன் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்." என்று தெரிவித்தார்.
தனது பயத்தை வெளிப்படுத்திய அவர், “ நான் இங்கே பயப்படுகிறேன். இங்கே யாரும் இல்லை. யாரும் எனக்கு தீங்கு விளைவிக்க முடியும். மின்சாரம் இல்லை. இருப்பினும், பலர் கூடாரத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்” என்று மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது தந்தை பின்னர் வந்து யாரையும் தன்னிடம் அனுப்ப வில்லை என்று மறுப்பு தெரிவித்தார். “என் தந்தை அவர்களை எதிர்கொண்டு கத்தினார், அவர்கள் எப்படி என் கூடாரத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முடியும் என்று கேட்டார்
மேலும் "கோபமாகவும் இருந்த என் சகோதரர், என் புகைப்படங்களை நீக்க அவர்களின் தொலைபேசிகளைப் பறிக்க முயன்றார். அப்போதுதான் ஒன்பது ஆண்கள் அவரைத் தாக்கினர்," என்று தெரிவித்தார்.
மகா கும்பமேளாவுக்கு பின் மோனாலிசா இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படங்கள் மற்றும் நேர்காணல்களுக்காக அவரை பலரும் தொந்தரவு செய்து வருகின்றனர். இது அவரது மாலை விற்பனையை கணிசமாக பாதித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரில் வசிக்கும் மோனலிசாவின் தாத்தா இதுகுறித்து பேசிய போது "பிரயாக்ராஜில் மோனலிசா மிகவும் வருத்தப்படுகிறாள். அவளால் வேலை செய்ய முடியவில்லை. எல்லோரும் அவளைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் கேமராக்களுடன் வந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவளால் தனது தயாரிப்புகளை விற்க முடியவில்லை," என்று தெரிவித்தார்.