
இந்த வன்முறையை தொடர்ந்து மாநிலத்தின் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு குழு, மிரட்டி பணம் பறிப்பதற்காக தானியங்கி ஆயுதங்களுடன் வந்ததாக தௌபல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் கூறினர். தாக்குதலுக்குப் பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் ஆயுததாரிகளின் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
முதல்வர் என் பிரேன் சிங், வெளியிட்ட வீடியோ செய்தியில், வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் குழுக்களை குவித்துள்ளோம்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்," என்றார் அவர். அவர் அனைத்து பங்குதாரர்களையும் அணுகி அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை நடத்துகிறார்.
இந்த புதிய வன்முறையைத் தொடர்ந்து, தௌபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் எல்லை நகரமான மோரேவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் போலீஸ் கமாண்டோக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
கிளர்ச்சியாளர்கள் பல ஆயுதங்களை கொண்டு தாக்கினர், அவை கமாண்டோக்கள் தங்கியிருந்த மோரே துரேல்வாங்மா லைகாயில் உள்ள CDO அவுட்போஸ்ட் கட்டிடத்திற்குள் விழுந்து வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த மே 3 அன்று வெடித்த மிக மோசமான இன மோதல்களில்180க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60,000 பேர் வீடற்றவர்களாக மாறினார்.