கிராமத்துக்குள் பேய்.! பேய்க்கு பயந்து 2 வாரம் லாக்டவுன் போட்ட பொதுமக்கள்.! எங்கு தெரியுமா ?

By Raghupati R  |  First Published Apr 23, 2022, 12:54 PM IST

ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாக்குலம் மாவட்டத்தில் உள்ள சருபுஜ்ஜிலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஏப்ரல் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை தாங்களாகவே லாக்டவுன் அறிவித்துக் கொண்டனர். இதற்கு பேய்யை காரணம் காட்டியுள்ளனர். 


அங்கு கடந்த ஒரு மாதத்தில் நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாந்திரீகவாதியை கிராம மக்கள் அணுகியுள்ளனர். அந்த நபர் கிராமத்தை பேய் சூழ்ந்துள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒரு வாரம் வெளியே வரக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். எனவே, கிராமத்தின் அனைத்து நுழைவு பகுதிகளிலும் முள் வேலி போட்டு கிராமத்திற்குள் யாரும் நுழைய விடாமல் மூடியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அரசு பள்ளிக்கும் பூட்டு போட்ட கிராமத்தினர் ஏப்ரல் 18 முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வாரம் லாக்டவுனில் இருக்க முடிவு செய்து வீட்டுக்குள் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஸ்ரீகாகக்குளம் காவல் எஸ்பி ராதிகாவுக்கு தெரிய வர அவர் தனது படையுடன் கிராமத்திற்கு விரைந்துள்ளார். இது மூட நம்பிக்கை எனக் கூறி இந்த லாக்டவுனை கைவிடுமாறு கிராம மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கிராமத்தினர் இரு நாள்களாக லாக்டவுனில் இருந்த நிலையில், காவல்துறை தலையிட்டு லாக்டவுனை நீக்கியுள்ளது.

கிராமத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளோம். இது போன்ற மூட நம்பிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளோம். நாங்கள் எந்த சடங்கிற்கும் எதிரானவர்கள் அல்ல. அதேவேளை பிறரை உள்ள விட மாட்டோம் என்று கிராம மக்கள் தடுப்பது முறையல்ல எனக் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் பேசும்போது, ‘எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இது போன்ற நிகழ்வுகளை உரிய சடங்குகள் மூலம் சரி செய்துள்ளோம். கிராம மக்களின் நன்மைக்காகவே இந்த சடங்கு செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் எப்படி லாக்டவுனில் இருந்தோமே அப்படித்தான் இப்போதும் லாக்டவுனில் உள்ளோம். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை’ என்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை மட்டுமல்ல ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : படிக்காதவன் ரஜினி மாதிரி உதயநிதி ஸ்டாலின்.! வெளுத்து வாங்கிய அண்ணாமலை !!

click me!