அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணவில்லை? கிடைத்துவிட்டதா? நடந்தது என்ன?

By Narendran SFirst Published Apr 22, 2022, 8:29 PM IST
Highlights

அமைச்சர் ரோஜாவின் செல்போன் மாயமானது பிறகு கிடைத்தது என சற்று நேரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் ரோஜாவின் செல்போன் மாயமானது பிறகு கிடைத்தது என சற்று நேரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் பேசப்படும் ஒரு அரசியல் வாதியாக இருப்பவர் ரோஜா. இவருக்கு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆந்திராவின் நகரி தொகுதியில் இவர் மேற்கொண்ட நலப்பணிகளும், மக்களிடம் இவர் பெற்ற நன்மதிப்பும், ரோஜாவுக்கு அமைச்சர் பதவியை பரிசாக கொடுத்தது. இந்த நிலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார். இந்த கூட்டம் முடிந்ததும் அவரது செல்போனை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பதறிபோன ரோஜா சுற்றுமுற்றும் செல்போனை தேடியுள்ளார். அவரோடு சேர்ந்து காவல்துறை அதிகாரிகளும் செல்போனை தேட ஆரம்பித்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, எஸ்வி பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்யும் நபர் ஒருவர், டேபிளில் இருந்த ரோஜாவின் செல்போனை எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த தற்காலிக ஊழியர் இடமிருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ரோஜாவின் செல்போனை யாருமே திருடவில்லை ரோஜாவின் செல்போன் காணாமல் போனது தொடர்பாக எஸ்வி பல்கலைக்கழக காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்.ரவீந்திரா ஒரு பேட்டி தந்தார். அவர் கூறுகையில், அமைச்சர் ரோஜா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் செல்போனை தந்துள்ளார். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் செல்போனை ரோஜா தேடியுள்ளார். ஆனால், உதவியாளரிடம் செல்போனை தந்ததை ரோஜா மறந்துவிட்டார்.

உடனே வேறு ஒரு செல்போனில் இருந்து, தன்னுடைய செல்போனுக்கு டயல் செய்து பார்த்தபோதும், செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம், மீட்டிங் நடப்பதால் சைலண்ட் மோடில் போட்டிருந்தார். அதற்கு பிறகுதான், தன் சட்டைப்பையில் போன் இருப்பதை உணர்ந்த அமைச்சரின் உதவியாளர் போனை திருப்பி தந்தார். அதனால், அமைச்சர் செல்போனை யாரும் திருடவில்லை, ஞாபக மறதி காரணமாகவே கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.  உண்மையிலேயே செல்போன் திருடுபோனதா? அல்லது ஞாபகமறதியால் குழப்பமா? சிசிடிவி காட்சியில் சிக்கிய ஊழியர் என்றார்களே, அவை அனைத்தும் பொய்யா? என்று பலரும் குழம்பி வருகின்றனர். எது எப்படியோ, ரோஜாவின் செல்போன் கிடைத்துவிட்டது. அதுபோதும் என்று அனைவரும் திருப்தி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!