புகழ்பெற்ற ஓவியர், சிற்பக் கலைஞர் விவான் சுந்தரம் காலமானார்

By SG Balan  |  First Published Mar 29, 2023, 4:47 PM IST

புகழ்பெற்ற இந்திய ஓவியரும் சிற்பக் கலைஞருமான விவான் சுந்தரம் தனது 79 வயதில் டெல்லியில் காலமானார்.


ஓவியரும் சமூக சேவகருமான விவான் சுந்தரம் புதன்கிழமை காலை 79 வயதில் காலமானார். விவான் சுந்தரம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.20 மணிக்கு காலமானார் என்று சப்தார் ஹஷ்மி மெமோரியல் அறக்கட்டளை கூறியுள்ளது. சுந்தரம் இந்த அறக்கட்டளையை நிறுவி அதன் அறங்காவலராகவும் இருந்தவர்.

சமூக ஆர்வலரும் சுந்தரத்தின் நண்பருமான ஷப்னம் ஹாஷ்மி கூறுகையில், சுந்தரம் கடந்த சில மாதங்களாக பல பிரச்சனைகளால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்கிறார். மூன்று மாதங்களாக அவர் மருத்துவமனைக்குப் போய்வந்துகொண்டிருந்தார் என அவர் ஹஷ்மி தெரிவிக்கிறார்.

Latest Videos

1943ஆம் ஆண்டு சிம்லாவில் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் கல்யாண் சுந்தரம் மற்றும் புகழ்பெற்ற இந்திய நவீன கலைஞரான அம்ரிதா ஷெர்-கிலின் சகோதரி இந்திரா ஷெர்-கில் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் சுந்தரம். டெல்லியைச் சேர்ந்த சுந்தரம், 1960களில் பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் உள்ள தி ஸ்லேடில் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட் ஆகியவற்றில் ஓவியம் பயின்றார்.

சுந்தரத்தின் கலைப் பயிற்சி, தனது கல்லூரிப் பருவத்தில் ஓவியம் வரைவதிலிருந்து தொடங்கியது. ஆனால் அப்போதே அவருக்கு புகைப்படக்கலை, சிற்பக்கலை என பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு ஏற்பட்டது. "அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அறிந்த சிறந்த கலைஞர்களில் ஒருவர். அவரது மறைவு கலை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவர் அபூர்வமான மனிதர், மிகவும் சுவாரஸ்யமான சிந்தனைகளைக் கொண்டவர். அவற்றைச் செயல்படுத்த 24 மணி நேரமும் உழைத்தார்" என ஹஷ்மி பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.

Deeply saddened by the passing of Vivan Sundaram, a renowned progressive artist and staunch secularist. He stood firmly for the working class and was a vocal critic of the communal forces. Joining the grief of his family, fellow artists and the world of culture. pic.twitter.com/lziVGDt6gr

— Pinarayi Vijayan (@pinarayivijayan)

சுந்தரத்தின் ஓவியப் படைப்புகள் கொச்சி (2012), சிட்னி (2008), செவில்லே (2006), தைபே (2006), ஷார்ஜா (2005), ஷாங்காய் (2004), ஹவானா (1997), ஜோகன்னஸ்பர்க் (1997) மற்றும் குவாங்ஜு (1997) ஆகிய நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

"வாருங்கள்! இனி நீங்கள் அந்நியர் அல்ல" (Step inside and you are no longer a stranger) என்ற தலைப்பில் சுந்தரம் உருவாக்கிய சிற்பம் மிகவும் புகழ்பெற்றது. இந்தச் சிற்பம் 2018ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் உள்ள கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தில் (KNMA) காட்சிக்கு வைக்கப்பட்டது. சுந்தரத்தின் மனைவி கீதா கபூர் அவர்களும் கலை வரலாற்றாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தரம் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "புகழ்பெற்ற முற்போக்கு கலைஞரும், தீவிர மதச்சார்பின்மைவாதியுமான விவான் சுந்தரத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தொழிலாள வர்க்கத்திற்காக உறுதியாக நின்றார். வகுப்புவாத சக்திகளைக் கடுமையாக விமர்சித்தார். அவரது குடும்பத்தினர், சக கலைஞர்கள் மற்றும் கலாசார உலகத்தினரின் சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

click me!