
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டார். பின்னர், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து குல்பூஷனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.
இதுகுறித்த வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வாசித்தது.
அதில், இந்தியாவின் கோரிக்கை நியாயமானதே என்றும், பாகிஸ்தான் நீதிமன்றத்தின் கருத்து ஏற்க முடியாதது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி எனவும், நீதி வென்று விட்டது எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜாதவ் விரைவில் வீடு திரும்பவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.