கோவையைச் சேர்ந்த பெண் வர்கலாவில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டபோது நடுவானில் வசமாக மாட்டிக்கொண்டார்.
வர்கலாவில் பாராகிளைடிங் விபத்து தொடர்பாக கேரள போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வர்கலாவில் உள்ள பாபநாசம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணி ஒருவரும், பாராகிளைடிங் பயிற்சியாளரும் அந்தரத்தில் வசமாக மாட்டிக்கொண்டனர். அவர்கள் பறந்துகொண்டிருந்த பாராகிளைடர் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைவாக வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இருவரும் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தனர். இறுதியாக 25 அடி உயரத்தில் அவர்கள் மாட்டிக்கொண்டிருந்த மின் கம்பத்தில் இருந்து விடுபட்டு, கீழே விழுந்தனர். தீயணைப்புப் படை தயாராக மீட்பு வலையை விரித்து வைத்திருந்ததால் பாதுகாப்பாக தப்பித்தனர்.
Women's Day Chefs: உணவில் உச்சம் தொட்ட பெண் சமையல் கலைஞர்கள்!
பாராகிளைடிங் பயிற்சியாளர் சந்தீப் மட்டும் கையில் லேசான காயம் அடைந்தார். பெண் சுற்றுலாப் பயணி காயமின்றி உயிர் பிழைத்தார். அவர் கோவையைச் சேர்ந்த பிரதீபா என்று காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் நடந்திய விசாரணையில் அந்த பாராகிளைடிங் நிறுவனத்திடம் உரிய அனுமதிக்கான ஆவணம் இல்லை என்று தெரிந்தது. இதனால் பாராகிளைடிங் பயிற்சியாளர் சந்தீப் மற்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்ரேயாஸ் மற்றும் பிரபுதேவா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய அனுமதியின்றி சாகச விளையாட்டு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.