மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்து வருகிறார்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றும், அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 41 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியானது நாட்டின் விவிஐபி தொகுதியாகும். இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடி உட்பட 7 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். இதில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்து வருகிறார். போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது சுற்றிலும் பிரதமர் மோடி பின்னடைவையே சந்தித்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் பிரதமர் மோடியை எதிர்த்து மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் களம் காண்கிறார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் 'பாகுபலி' என்று பிரபலமாக அழைக்கப்படும், 54 வயதான அஜய் ராய், 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடியிடம் தோல்வியடைந்தார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய் ராய், பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகம், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் செல்வாக்கும் அரசியல் பலமும் கொண்டது. பூர்வாஞ்சல் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.