மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் 8.30 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றும், அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை விவரம்
பாஜக - 36
சமாஜ்வாதி - 33
காங்கிரஸ் - 08
ஆர்.எல்.டி - 02
ஏ.எஸ்.பி.கே.ஆர் - 01
மக்களவைத் தேர்தல் முடிவுகள்: திருவனந்தபுரத்தில் சசி தரூரை தோற்கடிப்பாரா ராஜீவ் சந்திரசேகர்?
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியானது நாட்டின் விவிஐபி தொகுதியாகும். இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடி உட்பட 7 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். இதில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தற்போதைய நிலவரப்படி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை வகித்து வருகிறார்.
அதேபோல், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். அந்த தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்த சோனியா காந்தி. தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர் ராகுல் காந்தி அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.