
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து சட்டவிரோத மாட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டு வருகிறது இதனால், மாநிலத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கம், புலி, கழுதைப்புலி உள்ளிட்டவைக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படவில்லை.
அதற்கு மாறாக கோழிக்கறி, ஆட்டுக்கறி மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த மாமிசத்தை அந்த விலங்குகள் உண்ண ஆர்வம் காட்டுவதில்லை என பூங்கா அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சீல் வைப்பு
முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து, மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் இறைச்சி வெட்டும் கூடங்களை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார். மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 50 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட கடைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசு மாடுகள் கடத்தலையும் முற்றிலும் ஒழிக்க தனிப்படையும் உருவாக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு
இதன் காரணமாக மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் தொழிலும் படு மந்தமாகி உள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள மாமிச உண்ணி விலங்குகளான புலி, சிங்கம், கழுதைப்புலி, நரி,ஓநாய் உள்ளிட்டவற்றுக்கு மாட்டிறைச்சி வழங்கப்படுவது கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோழி, ஆட்டுக்கறி
மாட்டிறைச்சியை விரும்பி உண்ணும் இந்த விலங்குகளுக்கு கோழிக்கறி, ஆட்டுக்கறி மட்டுமே மிகக் குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மாட்டிறைச்சியின் விலையோடு ஒப்பிடுகையில், கோழி, ஆட்டுக்கறி விலை அதிகம் என்பதால், குறைவாகவே விலங்குகளுக்கு வழங்கப்படுகிறது.
235 கிலோ
எட்டவா நகர உயிரியல் பூங்காவின் இயக்குநர் அனில் படேல் கூறுகையில், “ இங்குள்ள சிங்கம், புலி, கழுதைப்புலி, சிறுத்தை, ஓநாய், நரி உள்ளிட்ட மாமிச உண்ணிகளுக்கு நாள்தோறும் 235 கிலோ மாட்டிறைச்சி தேவைப்படும். ஆனால், கடந்த 4 நாட்களாக அரசின் கடுமையான கெடுபிடிகளால் மாட்டிறைச்சி கிடைப்பதில்லை.
போதுமானதாக இல்லை
அதற்கு மாறாக கோழி, ஆட்டிறைச்சி மட்டுமே விலங்குகளுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகளுக்கு மாட்டிறைச்சிதான் சரியாக வரும், கோழி, ஆட்டுக்கறி போதுமானதாக இருக்காது, அதை விரும்பி உண்பதும் இல்லை. நாள் ஒன்றுக்கு ஒரு புலி, சிங்கம் சராசரியாக 8 முதல் 10 கிலோ மாட்டிறைச்சி உண்ணும். இதனால், விலங்குகள் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம்’’ என்றார்.