
உத்தரப்பிரதேச புதிய முதல்-அமைச்சர் பற்றி பா.ஜனதா மேலிடம் இன்றைக்குள் இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை முதல்வர் ஆக்குவது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
உ.பி. முதல்வர் யார்?
இழுபறி நிலவிய கோவா மற்றும் மணிப்பூரிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வியூகம் அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்து, உ.பி. மற்றம் உத்தரகாண்ட் முதல்வர்கள் குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங் ஏற்கனவே உ.பி. முதல்வராக பதவி வகித்தவர். அவர்தான் உ.பி.யி.ன் முதல்வர் பதவி போட்டியில் முன்னணியில் இருந்ததாக தேர்தலுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது.
யாதவர் அல்லாத தலைவர்
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராஜ்நாத் சிங் முதல்வர் பதவியை விரும்பவில்லை என கூறப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்க பா.ஜனதா திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், பா.ஜனதாவின் இந்த முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 403 தொகுதிகளில் மிக அதிக அளவில் 312 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதால், முதல்வர் தேர்வில் கவனமாகவும், நிதானமாகவும் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப
நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் 15 ஆண்டு கால வனவாசத்துக்குப்பின் பா.ஜனதா மீண்டும் அரியணை ஏற உள்ளது.
பிரதமர் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் அமோக ஆதரவு கொடுத்துள்ள வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பா.ஜனதாவை அழைத்துச் செல்லும் தலைவர் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.
ராஜ்நாத்சிங்குக்கு முதல் இடம்
எனவே, உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்படுத்தி மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லவும், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் மூத்த தலைவர் ஒருவரையே முதல்வர் ஆக்க வேண்டும் என்ற முடிவுக்கு பா.ஜனதா வந்துள்ளது.
இந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதல் இடத்தில் இருக்கிறார். ராஜ்நாத்தை முதல்வர் ஆக்க ஏற்கனவே பா.ஜனதாவின் கொள்கை வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவர்களிடம் விரிவான ஆலோசனை நடத்திய அமித்ஷா, ராஜ்நாத்சிங்கிடமும் அதுகுறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இன்று முடிவு
இந்த பிரச்சினையில் இன்றைக்குள் இறுதி முடிவு எடுத்து பா.ஜனதா மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வந்த தகவலின்படி, யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கேசவ் பிரசாத் மவுரியா (உ.பி. மாநில பா.ஜனதா தலைவர்), பிராமண வகுப்பை சேர்ந்தவரான மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா உள்ளிட்ட சிலருடைய பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.