
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் மற்றொரு அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிற்கு வந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அரசு பதவியேற்றதை அடுத்த சென்ற 10 நாட்களில் மூன்றாவது முறையாக இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் இரவு 10.03 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3வது முறை விமானத்தில் நாடு கடத்தப்பட்டவர்கள் பஞ்சாப் (31 பேர்), ஹரியானா (44 பேர்), குஜராத் (33 பேர்), உத்தரப் பிரதேசம் (2 பேர்), இமாச்சலப் பிரதேசம் (1 பேர்) மற்றும் உத்தராகண்ட் (1 பேர்) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு நாடுகடத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நாடுகடத்தப்பட்டவர்கள் அவர்களின் ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கை,கால்களில் விலங்குகளுடன் வந்த இந்தியர்கள்:
பிப்ரவரி 5ஆம் தேதி முதல் முறையாக அமெரிக்க ராணுவ விமானம் 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸுக்கு வந்தது. அடுத்து, 116 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் சனிக்கிழமை வந்தது. முதல் விமானம் வந்தபோதே நாடுகடத்தப்பட்ட அனைவரும் கைகால்களில் விலங்குகள் போடப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
நாடுகடத்தும் இந்தியர்களை அமெரிக்கா நடத்தும் விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அப்போது நடந்துகொண்டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2வது முறையாக சனிக்கிழமை வந்த விமானத்திலும் அதேபோல இந்தியர்கள் விலங்குகள் போடப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு இந்தியா கட்டணம் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் நரேந்தி மோடி அரசைச் சாடின. ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நாடுகடத்தப்படுபவர்கள் அமெரிக்கச் சட்டப்படி அவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்தியர்களை கண்ணியமான முறையில் நடத்த அமெரிக்காவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதிய நிகழ்வு அல்ல என்றும், பல ஆண்டுகளாக இது நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.
மோடியின் அமெரிக்கப் பயணம்:
இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியக் குடிமக்களை இந்தியா திரும்ப அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக டொனால்ட் டிரம்பிடம் கூறினார். இருப்பினும், நாடுகடத்தலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்தில் மெக்சிகோ, எல் சால்வடாருக்குப் பிறகு மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.