உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் மம்தா கட்சி.. பாஜகவை வீழ்த்த மெகா பிளான் போடும் தீதி.!

By Asianet TamilFirst Published Oct 22, 2021, 10:39 PM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்குப் போட்டியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வளர்த்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
 

மேற்கு வங்காளத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, கோவா, திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் களமிறங்கவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் சிறகடிக்கின்றன.  
2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று மம்தா பானர்ஜி கட்சியினர்கூட நினைத்தனர். அதன் காரணமாகவே தேர்தல் நேரத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு ஓட்டம் பிடித்தனர். ஆனால், தேர்தலில் மம்தா அடித்த அடியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்றாகிவிட்டன. இதனால், பல தரப்பினருக்கும் பாஜகவுக்கு சரியான மாற்றாக மம்தா இருப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்ப முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைந்துவருவதால், மம்தா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 
இந்தச் சூழலில்தான் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற திட்டமிடுதலை மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்தில் மட்டும் கட்சியை வளர்க்காமல், வாய்ப்புள்ள மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வளர்க்க மம்தா ஆர்வம் காட்டி வருவதாக கொல்கத்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒருபகுதியாக நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தனது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை மம்தா முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
உ.பி. காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள், சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆகியோருக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலை விரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. உ.பி. முன்னாள் முதல்வர் கம்லா பாட்டியின் பேரன் திரிபாதி விரைவில் மம்தா கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இக்குடும்பம் உ.பி.யில் பெரும் செல்வாக்குமிக்கது. இவரைப்போலவே உ.பி.யில் பல கட்சி தலைவர்கள், நிர்வாகிகளை வளைக்க மம்தா கட்சியின் அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். மம்தாவின் எண்ணம் ஈடேறுமா?
 

click me!