முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வேன்.. சர்ச்சை பேச்சு சாமியார்..11 நாட்களுக்குப் பிறகு கைது

By Thanalakshmi VFirst Published Apr 14, 2022, 10:32 AM IST
Highlights

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டும் வகையில் பேசிய துறவி 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வெறுப்பு பேச்சு, இழிவாக அருவறுக்கத்தக்க அறிக்கைகள், பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமத்தின் தலைமை பதவியில் உள்ள மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ், கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் நடைபெற்ற ஒரு இந்துக்களின் ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவருக்கு வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஊர்வலம் கைராபாத் பகுதியின் மசூதியை கடந்து சென்ற போது, வாகனத்தில் இருந்தபடி பேசிய பஜ்ரங் முனி தாஸ் " இந்த பகுதியில் ஒரு இந்து பெண் ஆண்களால் கேலி செய்யப்பட்டால், நான் முஸ்லிம் பெண்களை வீட்டில் இருந்து வெளியில் இழுந்து பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலின் வீடியோ காட்சிகள், சமூகவலை தளங்களிலும் வைரலான நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. 

இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம், உத்திர பிரதேச டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சர்ச்சையான வகையில் பேசிய மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியது. தொடர்ந்து, மிரட்டல் சம்பவம் நடந்த 11 நாட்களுக்கு பிறகு பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிரமத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

வெறுப்புப் பேச்சு, இழிவான அறிக்கைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பஜ்ரங் முனி மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அதில், "எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டது. அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக  கடந்த மாதத்தில் ஹரித்வாரில் நடந்த இந்து அமைப்பு நிகழ்ச்சியில் பேசிய யதி நரசிங்கானந்த், முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்கும், இனப்படுகொலை செய்வதற்கும் பகிரங்கமான அழைப்புகள் விடுக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுக்குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதபட்டதை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் கைது செய்யப்பட்டார். ஆனால் பிரதான குற்றவாளியான யதி நரசிங்கானந்த் தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில்,  மற்றொரு நிகழ்ச்சியிலும் இதுப்போன்று வன்முறை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவில் முஸ்லிம் ஒருவர் பிரதமரானால், இந்தியா இந்துக்கள் இல்லாத தேசமாக மாற்றப்படும் என்றும் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

click me!