விஜயதசமி அன்று ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒற்றுமையாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும், நாட்டைக் காக்க முடியும் என்று வலியுறுத்தினார். சாதி, மதம் போன்ற பாகுபாடுகளைத் தவிர்த்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் தீண்டாமை போன்ற பாகுபாடுகளை ஒழித்து ஒன்றுபட்டால், நம்மையும் நாட்டையும் காக்க முடியும் எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அடிமைத்தனத்திற்கு வழிவகுத்த, அந்நியப் படையெடுப்புகளில் நம் புனிதத் தலங்கள் அழிவதற்கும் சமூக நெறிமுறைகள் சிதைவதற்கு வாய்ப்பளித்த மூடநம்பிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமை மாலை, ஆர்யா நகர் ஸ்ரீ ஸ்ரீ ராமலீலா கமிட்டி ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீராமர் முடிசூட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரையாற்றினார். அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், ஒற்றுமையாக இல்லாததால்தான், அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டு பல்வேறு காலகட்டங்களில் காசியில் விஸ்வநாதர் கோயில், அயோத்தியில் ராமர் கோயில், மதுராவில் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலைப் படையெடுப்பாளர்கள் அழித்தனர் என்றார்.
நாம் அடிமைகளாக இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படலாம். சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. அது கலாச்சார மற்றும் ஆன்மிக சுதந்திரத்தையும் குறிக்கிறது. எனவே, நாம் சுதந்திரம் வாங்கித் தந்த எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை வீணாக்கக் கூடாது. அதற்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாலிவுட் மீடியேட்டராக அரசியலில் கலக்கி வந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை; யார் இவர்?
சமூக ஒற்றுமை இந்தியாவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி:
ஒற்றுமையின் பலத்தைக் காட்ட, சாதி, மதம், மொழி, தீண்டாமை போன்ற பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராமரின் கதையை எழுதிய மகரிஷி வால்மீகியின் பெயரில் அயோத்தியா விமான நிலையம் பெயரிடப்பட்டுள்ளது. அயோத்தியாவில் சமையலறை சபரி அன்னையின் பெயரிலும், பயணிகள் ஓய்வு விடுதி பகவான் ராமரின் நண்பர் நிஷாதராஜின் பெயரிலும் கட்டப்பட்டுள்ளன.
இந்த சமூக ஒற்றுமை இந்தியாவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. 2025ஆம் ஆண்டில் பிரயாக்ராஜில் நடைபெறும் பிரமாண்டமான கும்பமேளா நமது பாரம்பரியத்தின் மீதான நமது பற்றை வெளிப்படுத்தும்.
உலகில் வேறு எங்கும் நாகரிகத்தின் அடையாளம் இல்லாதபோது, இந்தியாவில் சனாதன சமூகம் இருந்தது. சனாதன சமூகம் ஒருபோதும் வறியதாக இல்லை. அது அறிவு மற்றும் செல்வத்தில் எப்போதும் முன்னணியில் இருந்தது. இடைக்காலத்தில் நடந்த சதித்திட்டத்தின் மூலம், சாதி, மொழி, மதம் போன்றவற்றின் பெயரால் அது பிரிக்கப்பட்டது. அந்தக் கிருமிகள் இன்றும் இருக்கின்றன. அந்தக் கிருமிகளை நாம் ஒருபோதும் வளர விடக்கூடாது.
நாம் ஒற்றுமையாக நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தனிப்பட்ட சுயநலம் ஒருபோதும் நாட்டை விட பெரியதாக இருக்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் நாட்டிற்காக இருக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடந்த போராட்டம் இதற்கு ஒரு உதாரணம் என்று முதல் யோகி ஆதித்யநாத் கூறினார்.
கால்நடை வளர்ப்புக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி கொடுக்கும் ஸ்டேட் வங்கி!