ரயிலில் முன்பதிவு செய்யாமல் செல்பவர்களுக்கு இந்த மாதிரியானப் பிரச்சனைகள் உள்ளதா?

First Published Aug 4, 2018, 10:26 AM IST
Highlights

பேருந்துகளை விட ரயில்களின்  பயணக்கட்டணம் இரண்டு மடங்கு குறைவு என்பதே  ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட அதிகம் என்றே கூறலாம். ஏனென்றால் வட மாநிலத்தை சேர்ந்த பலர் தமிழகத்தின் சென்னை, திருப்பூர், கோயம்பத்தூர் போன்ற இடங்களில் அதிகளவில் பணிபுரிகின்றனர். மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் நெருக்கடிக்கு பெயர் பெற்றவையாக உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட பேருந்துகளின் டிக்கெட் விலையேற்றத்தால் இந்த எண்ணிகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பேருந்துகளை விட ரயில்களின்  பயணக்கட்டணம் இரண்டு மடங்கு குறைவு என்பதே  ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. முதலில் வாரத்தின் இறுதி நாட்களில் மட்டுமே காணப்பட்டுவந்த நெரிசல் தற்பொழுது வார நாட்களிலும் மிக அதிகமாக காணப்படுகின்றது. 

முன்கூட்டியே செல்லும் இடங்களை திட்டமிடுபவர்கள்  ரயிலில் முன்பதிவு செய்துவிடுகின்றனர். ஆனால் எந்தவொரு திட்டமிடுதலும் இல்லமால் திடிரென பயணம் செய்ய நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் அன்ரிசர்வ்ட் எனப்படும் முன்பதிவு செய்யாமல் செல்லும் இரண்டாம் வகுப்பு இருக்கையை நம்பியே இருக்கின்றனர்.  ரயிலில் இருக்கும் இறுதி இரண்டு பெட்டிகளை ரயில்வே துறை இரண்டாம் இருக்கைகளாக ஒதுக்கியுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான ரயில்களில் இந்த இரண்டாம் வகுப்பு இருக்கைகள் முழுவதும் நிரம்பி நகர்வதற்கு கூட இடமில்லாமல் தான் செல்கின்றன. 

ஆனால் பிரச்சனை அதுவல்ல! இந்த இரண்டாம் வகுப்பு இருக்கைகளைப் பிடிப்பதற்கு தற்பொழுது ஒரு சில இடைத்தரகர்கள் ரயில்வே நிலையத்தின் உள்ளே காணப்படுகின்றனர். இவர்களின்  வேலை என்னவென்றால், ரயில் வரும் பிளாட் பாரத்தின் எண்ணை முன்னதாகவே அறிந்துகொண்டு  அந்த ரயிலின் அன்ரிசர்வ்ட் இருக்கையை இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து குறைந்தது ஐந்து முதல் ஆறு இருக்கைகளை பிடித்துகொல்கின்றனர். அதன் பிறகு வரும் பயணிகளிடம் ஒரு இருக்கைக்கு 50 முதல் 100 ருபாய் வரை பெற்றுக்கொண்டு அமரவைக்கின்றனர். பயணிகளும் நெருக்கடிக்கு பயந்தும், பேருந்துகளின் விலையேற்றத்திற்கு  பயந்தும்  ஏற்கனவே அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்திருந்தாலும் இவர்களுக்கு 50 முதல் 100 ருபாய் வரை கொடுத்து இருக்கையைப் பெற்றுகொள்கின்றனர். இந்த இடைத்தரகர்கள் எந்த நாளில் எந்த ரயிலில் கூட்டம் அதிகம் வரும் என்பதையும்  அறிந்துவைத்துள்ளனர்.

இந்த மாதிரியான செயல்கள் பல வருடங்களாக சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தினை சேர்ந்த பல முக்கிய ரயில்வே நிலையங்களில் நடைபெற்றுவருகின்றது. பயணிகளும் பேருந்தில் கட்டணம்  செலுத்துவதற்கு பதிலாக இந்த மாதிரியான இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தாலும் அவை பேருந்தின் கட்டணத்தை விட குறைவு தான் என கடந்து சென்றுவிடுகின்றனர்.  

பேருந்துகளின் கட்டண உயர்வை பயன்படுத்தி ரயிலில் இரண்டாம் இருக்கைகளில் பயணம் செய்பவர்களிடம் இந்த  இடைத்தரகர்கள் தங்களுடைய சாமர்த்திய வேலையை காட்டுகின்றனர். இது பேருந்து கட்டணத்தை உயர்த்திய மாநில அரசின் தவறா? அல்லது இந்த மாதிரியான செயலை இன்னும் கண்டிக்காமல் இருக்கும் மத்திய அரசின் தவறா? யாருடைய தவறாக இருந்தாலும் பாதிக்கபடுவது என்னவோ நடுத்தர வர்க்கத்தினர் தான்.

click me!