கொரோனாவை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 4:04 PM IST
Highlights

கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் 3 வாரங்கள் தேவை என பல மாநிலங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 7000ஐ நெருங்கிவிட்டது. 220 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது, 

கொரோனாவை தடுக்க தனிமைப்படுதலும் சமூக விலகலுமே சிறந்த வழி என்பதால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் அடுத்த ஒருசில வாரங்கள் மிக முக்கியமானவை. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன.

இதுகுறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஒடிசாவில் ஏற்கனவே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியமித்த 19 மருத்துவர்கள் அடங்கிய குழு முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரைத்துள்ளது. 

கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனாவை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவை என பல்வேறு மாநிலங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. சமூக விலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து என்று தெரிவித்துள்ளார். 
 

click me!