அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி விற்கவுள்ளது
அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தானியங்களை வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் தங்களிடம் உள்ள பிரதான உணவுப் பொருட்களின் இருப்புகளை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி விற்கவுள்ளது. பாரத் அரிசியானது வருகிற 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு வகையான அரிசிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. விலைகள் குறையும் வரை முக்கிய பொருட்களின் ஏற்றுமதி மீதான தடைகள் மற்றும் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் கோதுமை, அரிசி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடைகள் இன்னும் அமலில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த சஞ்சீவ் சோப்ரா, “அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை ஒரு கிலோ ரூ.29க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.” என்றார்.
பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகம் வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!
அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரிசி விலை கடந்த ஒரு வருடத்தில் சில்லறை சந்தைகளில் 14.5 சதவீதமும், மொத்த சந்தைகளில் 15.5 சதவீதமும் உயர்ந்துள்ளதால், விலையை கட்டுப்படுத்த இதுபோன்ற புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
பாரத் அரசியை முதற்கட்டமாக சில்லறை சந்தைகளில் விற்பனை செய்ய 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் இது கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே பாரத் கோதுமையை கிலோ ரூ.27.50க்கும், பாரத் பருப்பு ( கொண்டைக்கடலை) கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.