Union Budget 2026 LIVE Updates: நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், இன்று (பிப்ரவரி 1, 2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்க உள்ளார். பட்ஜெட்டில் வரி, வளர்ச்சி மற்றும் மக்களுக்கு தொடர்பான அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கவனமாக எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்த லைவ் அப்டேட்களை இங்கு காணலாம்.

02:23 PM (IST) Feb 01
பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் இதுவாகும். இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.
02:23 PM (IST) Feb 01
விளையாட்டு மைதானங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 'பணமாக்குதல் திட்டம்' புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க உதவும் என்றாலும், சாமானியர்களுக்கான கட்டண உயர்வு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
01:54 PM (IST) Feb 01
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், மத்திய பட்ஜெட் விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பை புறக்கணித்து, வெற்று அறிவிப்புகளுடன் இருப்பதாக விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பயனளிக்காத ஒன்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
01:18 PM (IST) Feb 01
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வரிச் சேமிப்பைத் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.
01:17 PM (IST) Feb 01
2026-27 மத்திய பட்ஜெட்டில் மருத்துவக் கல்வி கடன் வரி குறைப்பு, புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விவசாயத்திற்கான 'பாரத் விஸ்தார் ஏ.ஐ' செயலி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
12:47 PM (IST) Feb 01
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள், வங்கி அமைப்பு மறுஆய்வு, மற்றும் MSME-களுக்கான நிதி ஊக்கம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
12:24 PM (IST) Feb 01
மத்திய பட்ஜெட் 2026, இந்தியாவின் சுற்றுலா, கலாசார துறைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளது. பொதிகை மலையில் மலையேற்றம், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம், மருத்துவச் சுற்றுலா திட்டம் போன்றவை இதில் அடங்கும்.
12:21 PM (IST) Feb 01
மருத்துவம் மற்றும் கல்வி செலவுக்கு வரி பிடித்தம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்து விற்பனைக்கான டிடிஎஸ் குறைக்கப்படும். அசையா சொத்து விவரங்களை மறைத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
12:16 PM (IST) Feb 01
வரும் ஏப்ரல் 01ம் தேதி முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிவிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12:12 PM (IST) Feb 01
மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
12:06 PM (IST) Feb 01
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:56 AM (IST) Feb 01
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலை, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் மலையேறுவதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
11:50 AM (IST) Feb 01
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:48 AM (IST) Feb 01
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
11:45 AM (IST) Feb 01
காதி நெசவை மேம்படுத்த இந்தியாவில் ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும். பிராந்திய ரீதியலான 5 பிரத்யேக மருத்துவ மண்டலங்கள் உருவாக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
11:32 AM (IST) Feb 01
புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை உள்ளிட்ட அதிவேக ரயில் சேவைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:30 AM (IST) Feb 01
காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:26 AM (IST) Feb 01
மத்திய பட்ஜெட் 2026 வர்த்தக அமர்வின் தொடக்கத்தில், இந்தியப் பங்குச் சந்தைகள் மந்தமான நிலையில் தொடங்கின; முக்கியக் குறியீடுகள் ஆரம்பகட்ட வர்த்தகத்தில் மிகக் குறைந்த அளவிலான மாற்றத்தையே பதிவு செய்தன.
11:23 AM (IST) Feb 01
எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:20 AM (IST) Feb 01
பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:15 AM (IST) Feb 01
“நாங்கள் தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். பொது முதலீட்டில் வலுவான உந்துதலைப் பேணிக்காத்து, தற்சார்பை ஒரு தூணாகக் கொண்டு, நிதி விவேகம் மற்றும் பணவியல் நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். உள்நாட்டு உற்பத்தித் திறனை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம், மேலும் முக்கியமான இறக்குமதி சார்புகளைக் குறைத்துள்ளோம்,” என்று நிதியமைச்சர் கூறுகிறார்.
11:11 AM (IST) Feb 01
தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:07 AM (IST) Feb 01
2026 – 27 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 9வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
11:03 AM (IST) Feb 01
இந்தியப் பொருளாதார வரலாற்றில் இன்று ஒரு மைல்கல். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட், 75 ஆண்டுகால நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றியமைத்து புதிய சாதனை படைக்கிறது.
ஞாயிறு பட்ஜெட் - முதல்முறை: சுதந்திர இந்திய வரலாற்றில், இதுவரை ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கிடையாது. அந்த நீண்டகால வழக்கத்தை உடைத்து, இன்று விடுமுறை நாளில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். இது பங்குச்சந்தையின் உடனடித் தாக்கத்தைத் தவிர்த்து, நிதானமான பொருளாதாரப் புரிதலுக்கு வழிவகுக்கும்.
பாகம் பி (Part-B) - புதிய வியூகம்: வழக்கமாக, பட்ஜெட்டின் இரண்டாம் பகுதி (Part-B) வரிக்கொள்கைகளை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை அது "இந்தியப் பொருளாதாரத்தின் மாஸ்டர் பிளான்" ஆக மாறப்போகிறது. இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனம் பெறுகின்றன:
குறுகிய காலத் திட்டங்கள்: தற்போதைய நிதிச் சிக்கல்கள் மற்றும் பணவீக்கத்திற்கு உடனடித் தீர்வு காண்பது.
நீண்ட கால நிதிக் கொள்கைகள்: நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பது.
10:30 AM (IST) Feb 01
இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
10:07 AM (IST) Feb 01
பட்ஜெட் தினமான இன்று நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் புடவை அணிந்திருந்துள்ளார். அவர் ஊதா நிற கள்ளி வடிவமைப்புடன் கூடிய காஞ்சிபுரம் புடவையை அணிந்திருந்தார். அவர் தங்க நிற கள்ளி மற்றும் காபி பழுப்பு நிற எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட புடவையை அணிந்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா, இதற்கு முன்பு பல்வேறு இந்திய கைத்தறிப் புடவைகளில் எட்டு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.
09:37 AM (IST) Feb 01
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு திகாரப்பூர்வ அனுமதி பெற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி பவனில் சந்திக்கிறார். பாரம்பரியப்படி, முக்கியமான பொறுப்பை வழங்கும் முன் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக குடியரசுத் தலைவர் தயிரும் சர்க்கரையும் வழங்கினார்.
09:32 AM (IST) Feb 01
இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
09:07 AM (IST) Feb 01
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2026 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இன்று காலை தனது இல்லத்திலிருந்து கர்தவ்ய பவனுக்குப் புறப்பட்டார். செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசிய அவர், அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். "சிறிது பொறுமையாக இருங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும்," என்று அவர் கூறினார்.
08:53 AM (IST) Feb 01
நிதியமைச்சர் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று, காலை 10 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வருவார். காலை 10:15 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
08:40 AM (IST) Feb 01
பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் காலை 10.15 மணிக்கு நடைபெறும். பட்ஜெட் தாக்கல் காலை 11 மணிக்குத் தொடங்கும். பட்ஜெட்டிற்குப் பிறகு, நிதியமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு மதியம் 2.30 மணிக்கு நடைபெறும்.
08:39 AM (IST) Feb 01
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் அரசின் வருவாய், செலவினங்களை விவரிப்பதுடன், நிதி மசோதா மற்றும் FRBM சட்டத்தின் கீழ் முக்கிய அறிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது.
08:09 AM (IST) Feb 01
எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1,899.50 ஆக நிர்ணயித்துள்ளன.
07:26 AM (IST) Feb 01
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினம் வந்தால், “பட்ஜெட் தாக்கல் ஆகிவிட்டது… ஆனால் அதில் உண்மையில் என்ன இருக்கிறது?” என்ற குழப்பம் பொதுமக்களிடம் இயல்பாகவே எழும். டிவி விவாதங்கள், செய்தித் தலைப்புகள், சமூக வலைதள பதிவுகள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடிக்கும். ஆனால் உண்மையில் பட்ஜெட் என்பது மிகவும் சிக்கலான ஒன்றல்ல.
06:55 AM (IST) Feb 01
வேலைவாய்ப்பு, விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராய்கிந்தி, இந்திய அரசாங்கம் வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய உற்பத்தி மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்தத் துறைகள் நாடு முழுவதும் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
06:51 AM (IST) Feb 01
சமீப காலங்களில் மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டதில்லை. எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது ஒரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. இருப்பினும், வார இறுதி நாட்களில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது புதிதல்ல. 2025 பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் ஒரு சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, அருண் ஜெட்லி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டுகளை பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் முன்மொழிவுகளை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, 2017 ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தேதி பிப்ரவரி 28-லிருந்து பிப்ரவரி 1-க்கு மாற்றப்பட்டது. இந்த காரணத்திற்காகவே, இந்த ஆண்டு பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
06:50 AM (IST) Feb 01
தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், மத்திய பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்படுமா என்பதை அறிய நாட்டின் விவசாயத் துறை ஆவலுடன் காத்திருக்கிறது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக ரூ.6000 வழங்கப்படுகிறது. பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பட்ஜெட்டில், விவசாயத் துறைக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முறை இது அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.