உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

By Manikanda Prabu  |  First Published Feb 7, 2024, 7:58 PM IST

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது


மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து நாட்டில் உள்ள அனைவருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்து அதனை இந்திய சட்ட ஆணையம் மதிப்பாய்வு செய்து வருகிறது.

Latest Videos

undefined

இதனிடையே, உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் நேற்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களிம்ன் முழக்கங்களுடன் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதன் மீதான விவாதம் நடந்த நிலையில், உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பின் மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது சிவில் சட்டம் மசோதாவை நாட்டில் நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆகியுள்ளது.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?

இதுகுறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “இது ஒரு சிறப்பு நாள். பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் சமத்துவம், மற்றும் சம உரிமைகள் கொண்டது. இது தொடர்பாக பல சந்தேகங்கள் இருந்தாலும் சட்டசபையில் நடந்த விவாதம் அனைத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இது பெண்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். பெண்களின் முழுமையான வளர்ச்சிக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகும்.” என்றார்.

14 மக்களவை தொகுதி; 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா!

இந்த மசோதாவுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அம்மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான யஷ்பால் ஆர்யா கூறுகையில், “வரைவை முன்வைப்பதற்கு பதிலாக, மசோதா நேரடியாக தாக்கல் செய்யப்பட்டது. 2 மணி நேரத்தில் விவாதம் தொடங்கியது. ஆனால் இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைகளை வழங்கினர் மற்றும் சில எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். மசோதாவில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்ய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றை சரிசெய்யாமல் நிறைவேற்றியுள்ளனர்.” என்றார்.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, வெற்றி பெற்றதும் பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது.

அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர். அதனடிப்படையில், உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

click me!