நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jun 29, 2022, 10:28 PM IST
Highlights

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராகவும், தலைமையின் உத்தரவை மீறி கூட்டத்தை புறக்கணித்த அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக்கொண்டது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா... நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க திட்டமா? 

அதன் அடிப்படையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பி வைத்தார். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் அனுப்பி வைத்த தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, துணை சபாநாயகர், சட்டசபை செயலர் உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் அதுவரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா?

இந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

click me!