
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவையின் மையத்திற்கு அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி கூடியது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. மேற்குவங்க பாஜக எம்.பி. காகென் முர்மு என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் திடீரென குதித்தனர்.
தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் ஒன்றை வீசினர். அது கண்ணீர் புகை குண்டு போன்று இருந்தது. அதில் இருந்து வாயு வெளிப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த எம்.பி.,க்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிக்க முயன்று அவைக்குள்ளேயே சிறிது நேரம் ஓடியதுடன், வண்ணப் பொடிகளையும் வீசினர்.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த எம்.பி.க்கள், அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேசமயம், நாடாளுமன்றத்தின் வெளியேயும் சிலர் கண்ணீர் புகை குண்டு போன்ற பொருளை வீசினர். அதில், இரண்டு பெண்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் நீலம், அன்மோல்ஷிண்டே என தெரியவந்துள்ளது. போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து செல்லும்போது, சர்வாதிகார ஆட்சி ஒழிக எனவும், பாரத் மாதா கி ஜே என்றும் அவர்கள் முழக்கமிட்டபடி சென்றனர். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டன. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் அவர்கள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்ட அதேநாளான இன்று நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி இருவர் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறல் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.