திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடுமாறு, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மஹுவா மொய்த்ராவின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையிட்டார்.
undefined
ஆனால், இந்த நிலைமையில் தங்களால் முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு தெரிவித்துள்ளது. “இந்த விவகாரத்தில் இப்போதைய நிலைமையில் முடிவெடுக்க நான் விரும்பவில்லை; தலைமை நீதிபதியிடம் நீங்கள் முறையிடலாம். அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிடுவது பற்றி அவர் முடிவெடுப்பார்.” என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவின் பேரில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது.
மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
இதையடுத்து, பாஜக எம்பி வினோத் குமார் சோங்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தங்களது விசாரணை அறிக்கையை மக்களவையில் கடந்த 8ஆம் தேதியன்று தாக்கல் செய்தது. அதில், மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறையற்ற நடத்தைக்காக மக்களவை எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்யவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் இந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரை மக்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுத்தாக்கல் செய்துள்ளார்.