
இந்தியாவின் கடற்படை உளவு போர் விமானமான Tu-142, தனது 29 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் விமானத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக Tu-142 ரக கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கிக்கு எதிரான உளவு போர் விமானத்தை இந்திய கடற்படை பயன்படுத்தி வந்தது.
கடந்த 29 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் அளப்பெரிய பங்காற்றிய இந்த விமானம், இன்றுடன் தனது சேவையை நிறைவு செய்தது. தனது இறுதிக்கட்ட நடவடிக்கையை தமிழகத்தின் அரக்கோணத்திலிருந்து தொடங்கிய Tu-142 ரக விமானம், வெற்றிகரமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிறைவு செய்தது.
இதனையொட்டி, அங்குள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். Dega விமான தளத்தில் வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, தனது இறுதிக்கட்ட பணியை முடித்துக் கொண்டு தரையிறங்கிய விமானத்தின் மீது இருபுறத்திலிருந்தும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த விமானத்தை Kursura நீர்மூழ்கி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.