
டி.வி. செய்தி நேரலையில் தன் கணவர் விபத்தில் இறந்த செய்தியை பெண் செய்தி வாசிப்பாளர் துக்கத்தை அடக்கிக் கொண்டு வாசித்த வேதனையான சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
சட்டீஸ்கரில் உள்ள ஐ.பி.சி. செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர். இவருக்கும் ஹர்சத் கவாடே என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் ராய்ப்பூரில் வசித்து வருகின்றனர்
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் காலையில்,செய்தி வாசிக்கும் பணிக்கு சுப்ரீத் கவுர் வந்துள்ளார். அப்போது, மகாஸ்முந்த் மாவட்டம், பிதோரா பகுதியில் ஒரு ரெனால்ட் டஸ்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியது.
அதில் பயணித்த 5 பேரில் 3 பேர் இறந்துவிட்டனர். பெயர் அடையாளம் தெரியவில்லை என்று நிருபர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரொனால்ட் டஸ்டர் கார், 5 பயணித்தார்கள் என்றவுடன் சப்ரீத்கவுருக்கு தனது கணவராக இருக்குமோ எனச் சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், இதே வாகனத்தில் தனது கணவர், உறவினர்கள் 4 பேரோடு பயணித்து வருவதாக செல்போனில் தெரிவித்திருந்தார் என்ற வுடன் அவருக்கு அழுகையையும், கண்ணீரும் ததும்பி நின்றன.
ஆனால், இந்த தகவலை உறுதி செய்து கொள்ளும் முன் செய்தி தொடங்கும் நேரம் வந்துவிட்டது. செய்தி நேரலையில், தனது கணவர் விபத்துச் செய்தியை கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவுர் வாசித்தார்.
செய்தி ஒளிபரப்பு முடிந்தவுடன், உடனடியாக அரங்கைவிட்டு வெளியே சென்ற கவுர், நிருபருக்கு அழைப்புச்செய்து விபத்தில் இறந்தவர்கள் பெயரை விசாரித்தார்.
அப்போது, விபத்தில் இறந்த 3 பேரில் தனது கணவரும் ஒருவரும் என்று தெரிந்தவுடன், கவுர் உடைந்து அழுந்து, கண்ணீர்விட்டது சக ஊழியர்களையும் கண்கலங்கச் செய்துவிட்டது.
இது குறித்து செய்திசேனலின் செய்தி ஆசிரியர் கூறுகையில், “ சுப்ரீத் கவுர் செய்தி வாசிக்கும்போதே, விபத்தில் இறந்து அவரின் கணவர்தான் என்று எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், அப்போது அவரிடம் கூற எங்களுக்கு மனதில் துணிச்சல் இல்லை.
உண்மையில், மிகவும் திடமான மனவலிமை கொண்ட பெண் கவுர் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்த சம்பவம் எங்களை பெரிய அதிர்ச்சியில் தள்ளிவிட்டது” என்று தெரிவித்தார்.