உண்மை வென்றது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற கவுதம் அதானி!

By Manikanda Prabu  |  First Published Jan 3, 2024, 2:55 PM IST

அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி, உண்மை வென்றது என தெரிவித்துள்ளார்


அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், “அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.” என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

Tap to resize

Latest Videos

ஆனால், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் இந்த அறிக்கை.” என அதானி குழுமம் விளக்கம் அளித்தது.

இதனிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இக்குழுவானது தனது அறிக்கையை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த நிலையில், அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை. அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என உத்தரவிட்டது.

சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சீறும் சீமான்.!

மேலும், இதேபோல் 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடிந்துவிட்டது. மீதமுள்ளள இரண்டு வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி, உண்மை வென்றது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மை வென்றுள்ளது என்பதை காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுடன் துணை நின்றவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.” என பதிவிட்டுள்ளார்.

click me!