ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பய் சோரன் அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டுள்ளார்
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 31ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரை பிப்ரவரி 2ஆம் தேதி வரை அமலாக்கத்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்தது. அதன்பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு நெருக்கமான சம்பய் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஆட்சியமைக்க அவர் உரிமை கோரியும் அம்மாநில ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை, நீண்ட இழுபறிக்கு பின்னர், ஜார்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பொறுப்பேற்றுள்ளார்.
சம்பய் சோரன் தலைமையிலான புதிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தனது பெரும்பான்மையை அவரது அரசு நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பய் சோரன் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆபரேஷன் தாமரை திட்டத்தின்கீழ், ஆளும் கூட்டணி கட்சிகளின் சில எம்எல்ஏக்களை பாஜக அணுகியதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம் சாட்டியது. இதனால், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்று மீண்டும் ராஞ்சி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று பேசும் பிரதமர் மோடி!
அதேசமயம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சம்பய் சோரன் அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று காலியாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேசமயம், பாஜக கூட்டணிக்கு 29 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.