திரிபுரா சட்டசபைக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் சூழல் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஒரு பார்வை.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இந்த மாநிலத்தில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திப்ரா மோதா ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், வரும் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 28.13 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 20 பேர் பெண்கள்.
திப்ரா மோதா
திரிபுராவை 25 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் (சிபிஐஎம்) இருந்து பாஜக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த முறை திரிபுரா மக்கள் பாஜக, திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி புதிதாக துவங்கப்பட்டு இருக்கும் திப்ரா மோதா கட்சிக்கும் வாக்களிக்க உள்ளனர். இந்தக் கட்சியின் தலைவராக பிரத்யோத் மாணிக்யா தெப்பார்மா வாரிசான பிரத்யோத் பிக்ராம் மாணிக்ய தேப்பர்மா இருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஊழல்வாதிகளை கட்சியில் சேர்க்குமாறு காங்கிரஸ் தன்னை கட்டாயப்படுத்துகிறது என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து 2019ல் வெளியேறினார். தனியாக திப்ரா மோதா என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.
கைகோர்த்த காங்கிரஸ் சிபிஐ(எம்)
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாநிலத்தில் தேர்தல் என்றால் அது காங்கிரஸ் மற்றும் சிபிசி(எம்) கட்சி இடையேதான் நடந்து வந்தது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து களம் மாறிவிட்டது. பாஜக போட்டியிட்டது. தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் சரிசம பலத்துடன் நிற்கிறது. காங்கிரஸ், சிபிஐ(எம்) இணைந்து களம் காண்கிறது. பாஜக ஐபிஎப்டியுடன் இணைந்து போட்டியிடுகிறது. திப்ரா மோதா தனித்து போட்டியிடுகிறது.
திரிபுராவை தெறிக்கவிட்ட பாஜக
பாஜகவிற்காக இந்த மாநிலத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தனர். பிரதமர் மோடி பிப்ரவரி 11, 13 ஆகிய இரண்டு தேதிகளில் பேரணியில் ஈடுபட்டு இருந்தார். 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 51 இடங்களில் போட்டியிட்டு 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த முறை பாஜக 55 இடங்களிலும் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
உள்ளடி வேலை
பாஜக, ஐபிஎப்டி இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் இடங்களை பகிர்ந்து கொண்டாலும், சீட் கிடைக்காத பாஜகவினர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். கஞ்சன்பூர் தொகுதியில் ஐபிஎப்டி தலைவர் பிரேம் குமார் ரியாங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இவரை எதிர்த்து பாஜகவில் சீட் கிடைக்காத உள்ளூர் தலைவரான ராமச்சந்திரகாட் போட்டியிடுகிறார். தன்னை எதிர்த்து பாஜகவை சேர்ந்தவரே போட்டியிடுவதால், தனக்கு உள்ளூரில் வாக்குகள் சிதறும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நேருக்கு நேர்
ஒரே களத்தில் பல ஆண்டுகள் நேருக்கு நேர் போட்டியிட்டு வந்த காங்கிரஸ் சிபிஐஎம் இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சிபிஐஎம் 47 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தனி மாநிலம்
மாநிலத்தில் வெற்றி பெற்ற பின்னர் 'கிரேட்டர் திப்ராலேன்ட்' பெயரில் தனி மாநிலம் அமைக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ், பாஜகவுக்கு தேப் பர்மா நிர்ப்பந்தம் செய்தார். இதனால், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் திப்ரா மோதாவுடன் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை. தனித்தே திப்ரா மோதா களம் காண்கிறது. அசாம், மிசோரம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் திப்ரா பழங்குடியினர் பகுதிகளை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது தேப்பர்மாவின் கோரிக்கையாக இருக்கிறது. இதை முன்வைத்துதான் பழங்குடியினர் பகுதிகளில் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். திரிபுரா மக்கள் தொகையில் 31 சதவீதம் பேர் பழங்குடியினர். 42 இடங்களில் தேப்பர்மாவின் திப்ரா மோதா போட்டியிடுகிறது.
வாக்குகள் சிதறுமா?
மொத்தம் இருக்கும் 60 தொகுதிகளில் 20 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கானது. தேப்பர்மா மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் கூடுகிறது. ஆனால், வாக்குகளாக மாறுமா அல்லது வாக்குகளை சிதறுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.இவருக்கு அதிகளவில் கூட்டம் கூடுவதால், பாஜக தலைவர்களும் ஓயாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 'வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்போம், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றபட்சத்தில், தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம்' என்பதையும் திப்ரா மோதா கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
குடும்பத்துக்கு 1000 ரூபாய்
2018 ஆம் ஆண்டு தேர்தலில் தாழ்த்தப்பட்ட பழங்குடிகளுக்கான 20 இடங்களில் பாஜக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. பொதுவாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சிபிஐ(எம்) கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பழங்குடியினர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. 28 இடங்களில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மேற்குவங்கம் போன்ற ஆட்சி அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் திரிபுரா யார் கைக்கு செல்கிறது என்று.