
கடந்த செப்டம்பர் மாதம் ரெயில் பயணிகளுக்கான காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் காப்பீடு எடுத்துள்ளனர்.
அக்டோபர் 30-ந்தேதி வரை, ரெயில் பயணம் செய்த 2 கோடியே 7 லட்சத்து 63 ஆயிரத்து 353 பயணிகள் தங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து பயணம் செய்துள்ளனர் என ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடப்பு ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் பயணிகளுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர்மாதம் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. டிக்கெட்முன்பதிவு செய்யும் பயணிகள் 92 பைசா செலுத்தி, தங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ரெயில் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புக்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு கோர முடியும்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம், 92 பைசா காப்பீட்டை, பயணிகளுக்காக ஒரு காசுக்கு கடந்த அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை அறிவித்தது. இதில் இணையதளம் மூலம் 5.5 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், அதில் 3.5 லட்சம் பேர் காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் விபத்தில் சிக்கினாலோ, அல்லது தீவிரவாத தாக்குதல், துப்பாக்கி சூடு என எது நேர்ந்தாலும், காப்பீடு செய்தவர்கள் உயிரழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினர் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு பெற முடியும். நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சம், ரூ.2 லட்சம் வரை மருத்துவமனைச் செலவு, உயிரழப்பு ஏற்பட்டால் உடலை கொண்டு செல்ல, அல்லது காயம் பட்ட இடத்தில் இருந்து புறப்பட்ட இடத்துக்கு செல்ல ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.