
ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவான தினத்தை குறிக்கும் வகையில், ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்று உரையாற்றினார். சிறிய மாநிலமான சத்தீஸ்கர், வளர்ச்சிப் பாதையில் பெரிதும் முன்னேறியிருப்பதை பாராட்டிய பிரதமர், இந்த வளர்ச்சி வருங்கால சந்ததியினருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்கள் கடந்த 2000-வது ஆண்டில் அமைதியான முறையில் தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இதற்கு காரணமாக இருந்தவர் அப்போதைய பிரதமர் திரு. வாஜ்பாய்தான் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நயாராய்ப்பூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிட்ட பிரதமர், இந்த உயிரியல் பூங்கா, சுற்றுலாத் துறை மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.