அடேயப்பா … தமிழக சுங்கச் சாவடிகளில் இவ்வளவு வசூலா ? கேட்டா மலைச்சுப் போயிடுவீங்க !!

By Selvanayagam PFirst Published Dec 17, 2018, 9:35 PM IST
Highlights

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வசூல் செய்யப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மக்களவையில், அதிமுக-வைச் சேர்ந்த திருப்பூர் எம்பி சத்யபாமா , மயிலாடுதுறை எம்பி பாரதி மோகன், திருவண்ணாமலை எம்பி வனரோஜா  ஆகியோர் கூட்டாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதிமுக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மான்வியா பதிலளித்தார்.

அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலாகியிருப்பதாக தெரிவித்தார்.

சுங்கச் சாவடிகள் மட்டும் மூலமே இத்தனை கோடி வசூலா? என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய நாட்டின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு பெருமளவு இருக்கும்போது தமிழகத்திற்கான நலத்திட்டங்கள், கஜா புயல் நிவாரணம் என மத்திய அரசு குறைவாகவே ஒதுக்குவதை தமிழக கட்சிகள் தட்டிக் கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

click me!