திருப்பதி அன்னதானத்தில் பக்தர்களுக்கு சாதம், சாம்பார், ரசம் போன்றவற்றுடன் மசால் வடை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் அதற்கு ஏற்றார் போல உலக புகழ்பெற்ற இக்கோவிலில் தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. இவர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாக அன்னதானம் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பரிமாறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனை கூட்டத்தில் திருப்பதி அன்னதானத்தில் மசால் வடை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில்: பக்தர்களுக்கான அன்னதானத்தை மேம்படுத்துவதற்காக உணவிற்கான மெனுவில் மசால் வடையை சேர்க்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். குறிப்பக வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் மசாலா வடைகளை இணைத்து, பக்தர்களுக்கான அனுபவத்தை மேலும் சுவையாக மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக, 5,000 மசாலா வடைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதை சாப்பிட்ட பக்தர்கள் புதிய திட்டத்திற்கு ஆதரவும், வரவேற்பும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தரம் மற்றும் சுடை இரண்டிலும் அன்னதானம் சிறப்பாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிப்ரவரி 4ம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் வடை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.