ஏகத்துக்கும் எகிறுது ஏழுமலையானின் ‘திருப்பதி லட்டு’ பிரசாதம்... விலை கட்டுப்படியாகலையாம்! 

First Published Nov 27, 2017, 9:01 AM IST
Highlights
tiirupati devastanam planning to increase laddu price nominally


திருப்பதி தேவஸ்தானம் எடுத்த ஒரு முடிவைக் கேட்டு, பக்தர்கள் அடடா... 
லட்டுபோச்சே என்றுதான் புலம்புவார்கள் போலும்! 

திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரும் என்பார்கள். மொட்டை போட்டு உள்ளூரில் சுற்றினால் ‘என்ன திருப்பதியா?’ என்று கேட்பது வழக்கம். அதுபோல், திருப்பதி சென்று திரும்பி வந்தால், நட்புகளாகட்டும், அறிந்தவர் தெரிந்தவர் யாராகட்டும்.. உடனே கேட்பது... எனக்கு லட்டு எங்கே? என்பதுதான். 

அந்த அளவுக்கு புகழ்பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம்.  அந்த லட்டின் விலையை உயர்த்த, நிதித் துறையானது திருப்பதி தேவஸ்தானத்துக்கு பரிந்துரைத்துள்ளது. 

பக்தர்களுக்கு மிகவும் குறைந்த விலையில், சலுகைகளின் அடிப்படையில் லட்டுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படுவதால் லட்டு தயாரிப்பில் பெருமளவு  நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனை  ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தின் சார்பில் தயார் செய்யப் படும் ஒரு லட்டு தயார் செய்ய ரூ.37 செலவாகிறதாம். ஆனால், இந்த லட்டுகள் ரூ.5, ரூ.10, ரூ.25 என சலுகைகளின் அடிப்படையில் வழங்கப் படுவதால், ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறதாம். இதனால் மலையப்ப ஸ்வாமியின் பிரசாதமான லட்டுவை தொடர்ந்து விநியோகிக்க வேண்டும் என்றால் விலை உயர்த்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைக்கு நிதிதுறை பரிந்துரைத்துள்ளது. 

தற்போது, இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், மலைப் பாதை வழியே நடந்து வரும் வரும் பக்தர்களுக்கு ரூ. 10-க்கு 2 லட்டுகளும், அது போக கூடுதல் லட்டு என வரிசையில் நின்று ரூ.25-க்கு 1 லட்டும் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.300  கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு  3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதை அடுத்து, அரசு அனுமதியுடன் லட்டு  விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையின் முடிவில், லட்டு விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படி இருந்தாலும், மலையப்ப ஸ்வாமியின் பிரசாதமான லட்டு இல்லாமல் பக்தர்கள் எவரும் ஊர் திரும்ப மாட்டார்கள் என்பதால், பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி எல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

click me!