
தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில், ஆதார் அடிப்படையிலான பணமில்லா பரிவர்த்தனையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சோதனை முயற்சிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் நாடுமுழுவதும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இது குறித்து தபால்துறையின் செயலாளர் பி.வி. சுதாகார் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது-
டிஜிட்டல் பரிவர்த்தனை
தபால்சேவையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு வரும் விதமாக, ஆதார் அடிப்படையிலான பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்த உள்ளோம். உங்களிடம்கிரெட், டெபிட் கார்டு அல்லது ஆதார் கார்டு வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டு இருந்தால், நீங்கள் பதிவுத் தபால் செய்யும் போது கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கு மாறாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்த பணத்தை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
சோதனை ஓட்டம்
ஏ.பி. டெக்னாலஜி சர்வீஸ் முலம் இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஐதராபாத்தில்உள்ள தலைமை தபால் நிலையத்தில் சோதனையில் முறையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு தபால்நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடுமுழுவதும் கொண்டு வரப்படும்.
ஏ.டி.எம். எந்திரங்கள்
மேலும், எந்த வங்கியும், தபால்நிலையத்துக்குள் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். அந்த வங்கிகள் தங்களுக்கு நடக்கும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பணம் செலுத்தலாம், இந்த திட்டம் அடுத்த ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும்.
650 கிளைகள்
இதற்கிடையே 4500 கட்டிடங்களில் இந்தியா போஸ்ட்டின் ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் போஸ்டல் வங்கி செயல்படும், ஏறக்குறைய 650 கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
வீட்டுவாசலில் வங்கிச்சேவை
எங்களின் முக்கிய நோக்கமே அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும், நேரடி மானியம் திட்டம் மூலம் பரிமாற்றம் செய்வது, பிற நிறுவனங்களின் பரிமாற்றம்ஆகியவைதான். மக்களின் வீட்டு வாசலுக்கே தபால்நிலையத்தின் வங்கிச்சேவை கிடைக்கும்போது, கிராமப்பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.