
தமிழ் வளமையான மொழி என்றும் தொன்மை வாய்ந்த மொழி என்றும். இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கு தமிழ் மொழியை உதாரணமான குறிப்பிடலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சர்தார் படேல் பிறந்தநாளை முன்னிட்டு , ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம் என்ற தாரக மந்திரத்தை நாம் கையிலெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஒரே நாட்டில் நாம் வசித்தாலும் நாம் அந்நியனாக உணர்கிறோம். நமது பாரம்பரியம் கலாசாரம் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எனவே ஒரு மாநிலம் மற்ற மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் வளமையான மொழி. தொன்மை வாய்ந்த மொழி அதை நான் மனதார பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கு தமிழ் மொழியை குறிப்பிடலாம் என்றும் ஆனால் தமிழ்மொழியைப்பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது என கவலை தெரிவித்தார்.
நமது மாநிலங்களில் ஏதாவது ஒன்று தமிழக அரசுடன் ஓராண்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடக் கூடாது என மோடி கேள்வி எழுப்பினார்.
வட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ் பாடல்களை கற்றுக்கொள்ளலாமே? 100 வாக்கியங்களை எழுத கற்றுக்கொள்ளலாமே? தமிழ் எழுத்துகளை அறிந்துகொள்ளும் வகையில் கற்றுக்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழி செய்யலாமே? அவ்வப்போது திரைப்பட விழாக்களை நடத்தலாமே ? எப்போதாவது தமிழக மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமே? என தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி அடுக்கிக் கொண்டே போனார்.