
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாய்க்குட்டியுடன் வந்த சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ரேணுகா சௌத்ரி, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு தனது காரில் வந்தபோது, அவருடன் ஒரு நாய்க்குட்டியும் இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பின்னர் அவர் அந்த நாய்க்குட்டியைத் தனது காரிலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த செயல் நாடாளுமன்ற மரபுகள் குறித்துப் புதிய விவாதத்தைத் தூண்டியது.
இந்தச் சம்பவம் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, ரேணுகா சௌத்ரி தனது செயலை ஆவேசமாக நியாயப்படுத்தினார். தனது இந்தச் செயலால் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்றத்தையும் அவர் அவமதித்துவிட்டதாகக் கூறி, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சௌத்ரி, "என்ன மரபு? இதற்கு ஏதாவது சட்டம் இருக்கிறதா? நான் நாடாளுமன்றத்திற்கு வரும் வழியில், ஒரு விபத்து நடந்த இடத்தில் இந்த நாய்க்குட்டியைப் பார்த்தேன். அது அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில், நான் அதை எடுத்து என் காருக்குள் வைத்து நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தேன். பிறகு அதை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். ஒரு விலங்கின் உயிரைக் காப்பாற்றுவதற்கு யாராவது எப்படி எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் தனது விமர்சனத்தை ஆளும் அரசின் பக்கம் திருப்பினார். "கடிப்பவர்கள் உள்ளே அமர்ந்து அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லையா? நான் ஒரு வாயில்லா ஜீவனைப் அழைத்து வந்தால் மட்டும் அதை விவாதப் பொருளாக்குவதா?" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். தெருநாய்களைத் தான் தத்தெடுத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரேணுகா சௌத்ரியின் இந்தச் செயலை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாடகம் என்றும், நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேசுகையில், "ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்தையும், எம்.பி.க்களையும் அவமதித்துள்ளார். அவர் ஒரு நாயுடன் நாடாளுமன்றத்திற்கு வருகிறார், இது பற்றி கேட்டால், 'கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதாவது, நாடாளுமன்றம், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் நாய்கள் என்பது அவரது கருத்து" என்று கடுமையாகச் சாடினார்.
மேலும், ரேணுகா சௌத்ரியின் இந்தச் செயல், "அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு ஒரு பெரிய அவமதிப்பு" என்று கூறினார். ரேணுகா சௌத்ரியும், காங்கிரஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் டெல்லி காற்று மாசுபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மீண்டும் பலத்த மோதல் ஏற்பட்டது.