
கோவா என்றாலே கடற்கரை, வெளிநாட்டினர், குறைந்தவிலையில் மது, எங்கு, எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் இதுதான் பிரபலம். இதற்காகவே நாடுமுழுவதும் கோவாவுக்கு ஆண்டு தோறும் சுற்றுலா செல்கிறார்கள்.
ஆனால், இன்று திடீரென கோவா நகர போலீசார் ஒரு உத்தரவை பிறப்பித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கோவா நகரில் இனியாரும் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால், அவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவா தெற்கு மண்டல போலீஸ் எஸ்.பி. கார்த்திக் காஷ்யப் வெளியிட்ட உத்தரவில், “ கோவா நகரில் பொதுஇடங்களில் மதுக்குடிப்பவர்கள் மீது ஐ.பி.சி. 34 பிரிவின் படி கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில விரும்பத்தகாத சம்பவங்கள் மதுக்குடிப்பவர்களால் நடக்கிறது. இரவு நேரங்களில் கடற்கரையில் மதுக்குடிப்தால், பல குற்றச்செயல்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க, பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன், 60-க்கும் மேற்பட்ட ஓட்டல் நிர்வாகிகள், மதுக்கடை உரிமையாளர்கள், பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோரிடம் போலீஸ் எஸ்.பி. காஷ்யப் ஆலோசனை நடத்தினார். அதன்பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.