
கேரள ஆட்டோ டிரைவர் ஒருவர்,தனது ஆட்டோவின் பின்பக்கத்தை “ஸ்கார்ப்பியோ” கார் போன்று வடிவமைத்து இருந்ததைக் கண்டு பிரமித்துப் போன, மகிந்திரா நிறுவனம் அவரை அழைத்து மினிவேன் ஒன்றை பரிசாக அளித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுனில். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனது ஆட்டோவின் பின்பகுதியை மகிந்திரா நிறுவனத்தின் “ஸ்கார்பியோ” கார் போன்று வடிவமைத்து ஓட்டி வந்துள்ளார். இந்த வடிவமைப்பு இவரின் பயணிகளுக்கு மிகவும் பிடித்துப்போய், பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அணில் பணிக்கர் என்பவர், இந்த “ஸ்கார்ப்பியோ” போன்று இருக்கும் இந்த ஆட்டோவை புகைப்படம் எடுத்து, “எங்கள் ஊரில் கலக்கும் மினி ஸ்கார்ப்பியோ” என்று டேக் செய்து, மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திராவுக்கு டுவிட்டரில் அனுப்பிவிட்டார். இதைப் பார்த்த மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆட்டோ ஸ்கார்பியோ வடிவில் இருப்பதைக் கண்டு வியந்துவிட்டார்.
உடனடியாக தனது நிறுவன ஊழியர்களை அழைத்து, அந்த ஆட்டோ டிரைவர், அவரின் ஆட்டோ உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அந்த ஆட்டோ டிரைவருக்கு பரிசு அளிக்கப்போவதாகவும் கூறுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கேரள மாநிலத்தில் சல்லைடையாக அலைந்து, அந்த ஆட்டோவையும், உரிமையாளர் சுனிலையும் மகிந்திரா நிறுவன ஊழியர்கள் கண்டுபடித்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, ஆட்டோ ஓட்டுநர் சுனிலுக்கு பாராட்டும், அவருக்கு பரிசாக மகிந்திராவின் “சுப்ரோ மினிவேன்” வாகனத்தை நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாமல், ஸ்கார்பியோ போன்று வடிவமைக்கப்பட்டு இருந்த ஆட்டோவை மகிந்திரா நிறுவனம் தங்களுக்கு வேண்டும் என பெற்றுக்கொண்டு மகிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைத்தது.
3 சக்கர வாகனத்தை பெற்றக்கொண்டு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4 சக்கர வேனை மகிந்திரா நிறுவனம் ஆட்டோ ஓட்டுநர் சுனிலுக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் சுனில், தனது பழைய ஆட்டோ, புதிய மினிவேன் ஆகியவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதை மகிந்திரா நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.