
நீதிபதி கர்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் அவர், கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் தன்னை பணியிட மாற்றம் செய்தது தவறு என கூறி பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் வழக்கில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து வழக்கில் ஆஜரான நீதிபதி கர்ணன், விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையொட்டி நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரிசோதனை கொல்கத்தாவிலேயே நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி மருத்துவ குழுவினர், நீதிபதி கர்ணன் வீட்டுக்கு இன்று சென்றனர். ஆனால் அவர், மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், தான் சரியான மன நிலையில் இருப்பதாக மருத்துவ குழுவினரிடம்தெரிவித்தார்.