ராமர் கோயில் கட்டும்போது எந்த விஷயம் மிகப்பெரிய சவாலாக இருந்தது என கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதனிடையே, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ராமர் கோயில் கட்டும்போது எந்த விஷயம் மிகப்பெரிய சவாலாக இருந்தது என கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறிய தகவல் தெரியவந்துள்ளது.
அயோத்தி கோயில் கட்டுமான பணிகளில், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நிருபேந்திர மிஸ்ரா உள்ளார். இவர் கூறும்போது, ராமர் கோயிலின் அஸ்திவாரத்தை கட்டுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார். அப்பகுதியில் உள்ள மண்ணை பரிசோதித்து முடிவுகள் வந்தபோது, கோயில் அஸ்திவாரத்துக்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மண்ணை தோண்ட வேண்டும் என்பது தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.
தலித் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கும் அமலாக்கத்துறை!
அதன்பிறகு 15 மீட்டர் ஆழத்திற்கு அதாவது 3 மாடி கட்டடத்தின் அளவுக்கு சமமான மண் தோண்டி எடுக்கப்பட்டது. மழைக்காலங்களில் மண் சரிந்து விழும் என்பதால், அதற்கு முன்னதாகவே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.
15 மீட்டர் ஆழத்திற்கு தோண்டிய பிறகு பெரிய குளம் போன்று அது ஆகி விட்டதாகவும், அப்போது அதனை நிரப்புவது தங்கள் முன் இருந்த இரண்டாவது பெரிய சவால் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நிருபேந்திர மிஸ்ரா, “அடித்தளத்தை நிரப்ப பொறிக்கப்பட்ட மண்ணை பயன்படுத்தினோம். பாறையாக மாறிக் கொள்ளும் தன்மை கொண்ட மண் அது. கோயிலின் அஸ்திவாரத்தை பாறை அஸ்திவாரம் போன்று கட்டினோம். அடித்தளத்தை நிரப்பிய பின்னர் அதன் வலிமை சோதிக்கப்பட்டது. கட்டுமான நிறுவனமான எல்&டி மற்றும் திட்ட கண்காணிப்பு டாடா ஆலோசகர் பொறியாளர்கள் இதற்கு உதவினர்.” என தெரிவித்துள்ளார்.