
பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக, அமெரிக்க ஊடக நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா - அமெரிக்கா இடையே வரலாறு காணாத நம்பிக்கை உள்ளதாகவும், இந்தியா வேறு எந்த நாட்டின் இடத்தையும் பிடிக்கவில்லை; உலக அளவில் இந்தியாவுக்கு உரிய இடம் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களில் தனித்துவ இடத்துக்கு இந்தியா தகுதியானது என்று அந்த பேட்டியின்போது, பிரதமர் மோடி கூறினார். எந்தவொரு நாட்டுக்கும் மாற்றாக நாங்கள் இந்தியாவை பார்க்கவில்லை. இந்த செயல்முறையால் உலகில் தனக்கான சரியான இடத்தை இந்தியா பெறுவதை பார்க்கிறோம். இன்று உலகம் முன்னெப்போதையும் விட ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. மீள்தன்மையை உருவாக்க விநியோக சங்கிலியை மேலும் பல்வகைப்படுத்தல் வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி, இயல்பான உறவுக்கு எல்லையில் அமைதி அவசியம் என்றார். “அனைத்து நாடுகளின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். பிராந்திய ஒருமைப்பாடு, சட்டத்தின் ஆட்சி, வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு நாடும் சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்திக்கும் பிரபல தலைவர்கள் யார்?
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பேசிய பிரதமர் மோடி, சண்டையிடுவதற்கு பதிலாக, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார். சிலர் நடுநிலைமையாக இருக்கிறோம், ஆனால் நடுநிலை இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்தியாவின் மிகப்பெரிய முன்னுரிமை அமைதிதான் என்பதை உலகம் முழுமையாக நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் உரிமை கோருவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி அந்த பேட்டியின் போது பேசினார். இதுகுறித்து பேசிய அவர், ஐ.நா., பாதுகாப்பு சபையின் தற்போதைய உறுப்பினர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டுமா என்று உலகம் கேள்வி எழுப்ப வேண்டும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கான அனைத்து உண்மையான முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. அதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.” என்றார்.
“சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான். அதனால்தான் எனது சிந்தனை செயல்முறை, எனது நடத்தை, நான் சொல்வது மற்றும் செய்வது எனது நாட்டின் பண்புகள் மற்றும் மரபுகளால் ஈர்க்கப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து எனக்கு பலம் கிடைக்கிறது.” எனவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.