மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வரை யாருக்கும் ஓய்வு கிடையாது - எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி உத்வேகப் பேச்சு...

First Published Mar 16, 2017, 8:53 PM IST
Highlights
There is no rest for anyone who likes to rule again - utvekap Modis speech at a meeting of MPs


2019ம் ஆண்டில் பாரதிஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வரை எனக்கும் ஓய்வு கிடையாது, உங்களையும் ஓய்வெடுக்கவிட மாட்டேன் என்றுபாரதிய ஜனதா நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உத்வேகமாகப் பேசினார்.

தேர்தல் வெற்றி

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத்தேர்தலில் உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிறிய கட்சிகளின் துணையுடன் கோவா, மணிப்பூரிலும்ஆட்சி அமைத்துள்ளது.

எம்.பி.க்கள் கூட்டம்

இந்த தேர்தல் வெற்றிக்குப் பின், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமிஷ் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டவர்களும், எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கூட்டத்துக்குள் வந்ததும் அனைத்து எம்.பி.க்களும் எழுந்து மரியாதை செலுத்தினர்.

76 மணி நேரம்

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “ வரும் மே மாதம் 26-ந்தேதி யோடு நமது ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைவதால், மக்கள்மத்தியில் அரசின் சாதனைகளை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து 76 மணி நேரம் நடத்த வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் நமக்கு வாக்களித்த தலித் மக்களுக்காக அம்பேத்கர்பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதியை முன்னிட்டு, ஒருவாரம் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அம்பேத்கரின் பங்களிப்புகள், சேவைகள், பணிகள் ஆகியவற்றை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் தூதுவர்கள்

குறிப்பாக அம்பேத்கர் பெயரில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ் ‘பிம்’ குறித்து மக்களுக்கு  விழிப்புணர்வு உண்டாக்க இளைஞர்களை தூதுவர்களாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும். இந்த ‘பிம்’  ஆப்ஸ் எப்படி இயங்குகிறது, இயக்குவது குறித்து சிறுவணிகர்களுக்கு விளக்க வேண்டும்.

இளைஞர்கள் மத்தியஅரசின் நலப்பணிகளுக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் தூதுவர்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளை நம்பி இருப்பதைக் காட்டிலும், இளைஞர்கள் மொபைல் போனை சார்ந்தே இருக்கிறார்கள்.

நிறுவன நாள்

கட்சி நிறுவப்பட்ட நாள் ஏப்ரல் 6-ந்தேதி வருவதையொட்டி அதைக் கொண்டாடும் வகையில், அனைத்து தலைவர்களும், தொண்டர்களும், ‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும், வார்டிலும் இதைக் ஒருவாரம் வரை கொண்டாட வேண்டும். 

3-வது ஆண்டு

நமது ஆட்சியின் 3 ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, எம்.பி.க்கள் தங்களின் ஆலோசனைகளை அளிக்கலாம். 2019ம் ஆண்டு மீண்டும் பாரதிய ஜனதா மத்தியில் அமையும் வரை எனக்கும் ஓய்வில்லை, உங்களுக்கும் கிடையாது'' என்று தெரிவித்தார்.

2019 இலக்கு

கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில்,“ சமீபத்தில் 5 மாநிலங்களில் கிடைத்த தேர்தல் வெற்றி என்பது, சாதி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், மோடியின் ஆட்சிக்கும், தலைமைக்கும் மக்கள்அளித்த ஆதரவாகும். நமது அடுத்த இலக்கு 2019ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதாகும்'' என்று தெரிவித்தார்.

click me!