
உத்தரப்பிரதேசத்தில் இனி வரும் காலங்களில் புதிதாக தனியார்கள் பள்ளிகள் தொடங்க அங்கீகாரம் வழங்கப்படாது, மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க தேர்வுகள் அனைத்தும் ஆன்-லைன் மூலமே நடத்தப்படும் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
லக்னோவில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில், துணை முதல்வர் தினேஷ் சர்மா, பல்வேறு ஆசிரியர்கள் அமைப்புகள், சங்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
அந்த ஆலோசனையின் முடிவில் முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், “ உத்தரப்பிரதேசத்தில் இனிவரும் காலங்களில் மாநில கல்வி வாரியத்தில் இருந்து புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அங்கீகாரம் வழங்கப்படாது. அங்கீகாரம் வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதால், அதைத்தடுக்க இந்த முறை கொண்டுவரப்படுகிறது.
மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதைத் தவிர்க்கும் வகையில், இனி மாநிலக் கல்வித் தேர்வுகள் அனைத்தும் இணையதளம் மூலமே நடத்தப்படும். ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வர வேண்டும், மிகவும் கடினமாக உழைத்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு 220 நாட்கள் கண்டிப்பாக வேலை நாட்களை நடத்த வேண்டும். 200 நாட்களுக்குள் அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும். மீதமிருக்கும் 20 நாட்களில் மாணவர்கள் யார் படிப்பில் பின்தங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் எடுக்கவேண்டும். மாணவர்களின் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
கல்வி முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, அனைத்து மாணவர்களும் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும், புதிதாக சேரும் மாணவர்களும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பள்ளியில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படும் போது, கண்காணிப்பு கேமிரா கொண்டு தேர்வுகள் கண்காணிக்கப்படும். அனைத்து தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளும், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வங்கி மூலமே செலுத்தி, ஆவணப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பணியமர்த்தும் போது, உரிய தகுதியானவர்களை மட்டுமே அந்தந்த வகுப்புக்கு நியமிக்க வேண்டும். மாநிலக்கல்வியில் என்.சி.இ.ஆர்.டித பாடத்திட்டத்தை சேர்க்க அரசு ஆலோசித்து வருகிறது.
தனியார் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தடுக்கவும், நெறிமுறைப்படுத்தவும், விரைவில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.