
உத்தரபிதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில், கடமையை செய்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பொது மக்கள் முன்னிலையில் திட்டி அழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரை அடுத்த ரில், கரீம்நகர் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களின் போராட்டத்தில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி சாரு நிகாம், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தார். மேலும் போக்குவரத்தை சீர்படுத்தினார்.
இதனிடையே போராட்டம் நடைபெறும் இடத்துக்கு தாமதமாக வந்த பாஜக எம்எல்ஏ, ராதா மோகன் தாஸ் அகர்வால், அங்கு போராட்டக் காரர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி போராட்டக்கார்களுடன் சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தி கலையச் செய்ததை அறிந்து கடுப்பான பாஜக எம்எல்ஏ, ராதா மோகன் தாஸ் அகர்வால் , சம்பவ இடத்திற்கு தான் வருவதற்குள் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என பெண் ஐபிஎஸ் அதிகாரியை கண்டபடி திட்டித் தீர்த்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
உத்தரபிரதேசத்தில் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பெயர் பெற்று வரும் முதலமைச்சர் யோகி ஆத்யநாத் இந்த எம்எல்ஏவின் தவறான செய்கைக்கு நடவடிக்கை எடுப்பாரா?